தாய் நாட்டிற்க்கு நம்முடைய கடமை
நம்முடைய நாட்டின் ஒருமைபாட்டையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் நம்மால் இயன்ற அளவில் முயற்சி செய்து பாதுகாக்க வேண்டும். இடையூறுகளையும், தோல்விகளையும் கண்டு துவண்டு விடக் கூடாது. அல்லது, சீர்படுத்த முடியாது என்று விலகிப் போய்விடக் கூடாது. அலட்சியப் போக்கு அல்லது பாராமுகம் என்பது நல்லதோர் வீணை செய்து அதை புழுதியில் எறிவதற்கு ஒப்பானது.
நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வரலாற்றை கூர்ந்து கவனித்தால், வெற்றி தோல்வி என்பது தெளிவான சிந்தனை, அதில் ஆழ்ந்த நம்பிக்கை, அவற்றை நடைமுறையில் கடைபிடித்த முன்னுதாரணமான வாழ்க்கை முறை, விடா முயற்சி போன்ற பல காரணங்களால் ஏற்படுவதை காண முடிகின்றது.
ஆங்கிலத்தில், ‘The strength of a chain, lies in the strength of its, weakest link’ என்று சொல்வதுண்டு. அதாவது, ஒரு சங்கிலியின் வலிமை, அந்தச் சங்கிலியில் கோர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வளையத்தின் வலிமையை பொறுத்தே அமையும். வலிமையற்ற ஒரே ஒரு வளையத்தால், அந்த சங்கிலியின் மற்ற வளையங்களின் முழு வலிமையை உபயோகிக்க முடியாமல் போகும்.
ஆகவே வெற்றி தோல்விகளுக்கான காரணங்களை வெளியிலெங்கும் தேடாமல், சுய பரிசோதனை செய்து, நமது பங்களிப்பை பெருக்குவதில் முனைய வேண்டும்.
எந்த ஒரு மாற்றமும் நம்மிடமிருந்து தான் துவங்க வேண்டும் என்று பொருள் பட அமைந்துள்ளது, அவ்வையின் கீழ்க்கண்ட பாடல் வரிகள்.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்
அவற்றை நினைவு கூர்ந்து, நம்மை இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்போமாக.
ஜெய் ஹிந்த்